சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட அடுக்குமாடி திட்டங்களுக்கு மறு மதிப்பீடுக்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் ஈரோட்டில் அறிவிக்கப்பட்ட, நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மறு மதிப்பீடு அறிக்கை அளிக்க, உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை, வீட்டுவசதி வாரியம் அமைத்து உள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மாநிலம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை ஈரோடு உள்பட 4 மாவட்டங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என கடந்த 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில், 40.60 கோடி ரூபாயில், 108 வீடுகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், அறிவிக்கப்பட்டது. இதே போன்று, சென்னையில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகளில் பழைய கட்டடங்களை இடித்து, புதிய அடுக்குமாடி திட்டங்கள் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு, 2023ல் வாரிய நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது. ஆனால், சிமென்ட், கம்பி உள்பட கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இத்திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இத்திட்டங்கள் அறிவிப்பு நிலையிலேயே முடங்கும் சூழல் ஏடற்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த திட்டங்களை செயல்படுத்தும் வகையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய உயர் அதிகாரிகள் அடங்கிய மறு மதிப்பீட்டு குழுவை, வீட்டுவசதி வாரியம் அமைத்து உள்ளது. இதன்படி, நிதித்துறை இணை செயலர், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., பிரதிநிதி, பொதுப்பணித் துறையின் முதன்மை தலைமை பொறியாளர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர், வீட்டுவசதி வாரிய தலைமை பொறியாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர், தற்போதைய நிலவரம் அடிப்படையில், இத்திட்டங்களுக்கு மறு மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிப்பார்கள். இதற்கான தொடர் நடவடிக்கை எடுக்க, வாரிய நிர்வாக இயக்குனருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.