சென்னை:
மிழகத்தில் 46 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும், உயர் கல்வியின் நிலை அதல பாதாளத்தில் உள்ளது என்றும் இதன் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: மாலுமி இல்லாத கப்பல் கரை சேராது என்பதைப் போல, தமிழகத்திலுள்ள அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் வழி நடத்துவதற்கு முதல்வர்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. காலியிடங்களை கணக்கெடுத்து நிரப்ப வேண்டிய அரசு, எதையும் செய்யாமல் உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 87 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட, அதாவது 46 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கி விட்டதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் அதிகாரப்பூர்வ முதல்வர்கள் இல்லாத நிலையில், அவர்களின் பணிகளை கவனிக்க பொறுப்பு முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் கல்லூரியில் எந்த மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள முடிவதில்லை. மொத்தத்தில் உயர்கல்வியின் தரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல.   17 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருக்கும் போதிலும், அவற்றை நிறைவேற்ற முயற்சி கூட மேற் கொள்ளப்படவில்லை. நடப்பாண்டில் மேலும் 29 கல்லூரி முதல்வர்கள் ஓய்வு பெற்றதால் காலியிடங்களின் எண்ணிக்கை 46&ஆக  அதிகரித்து விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரின் தருமபுரி மண்டலத்திலுள்ள 13 கல்லூரிகளில் 9 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பது தான்.
அதுமட்டுமின்றி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 6000 ஆசிரியர் பணியிடங்களில் 2000க்கும் மேற்பட்டவை காலியாக உள்ளன. அவற்றை நிரப்பாத அரசு 1623 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து சமாளித்து வருகிறது. மாலைநேரக் கல்லூரிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அந்த கல்லூரிகளில் முழுநேர ஆசிரியர்கள் இல்லாத நிலையில், 1661 கவுரவ விரிவுரை யாளர்கள் தான் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்த வேண்டியிருக்கிறது. தங்களுக்கு பணி நிலைப்பு கோரி அரசுக்கு அவர்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்த பயனுமில்லை. இதனால், கல்லூரி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதுடன், கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பணி நிலைப்பு கனவாகி விட்டது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  உயர்கல்வித்துறை செயலாளர் பதவியும் நிரப்பப்படவில்லை. இத்தகைய சூழலில் கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்களும் காலியாகியுள்ளன.
இவ்வாறு உயர்கல்வியின் மேம்பாட்டுக்குரிய எதையுமே செய்யாமல்,  உயர்கல்வித் தரத்தை உயர்த்துவோம், உயர்கல்வித் தரத்தை உயர்த்துவோம் என்பது வெற்று முழக்கமாகவே அமையும். நீர்ப்பாய்ச்சாமல் பயிர் வளர்க்க முடியாது; உணவளிக்காமல் உயிர் வளர்க்க முடியாது என்பதைப் போலவே உயர்கல்வியின் வளர்ச்சிக்கான அடிப்படைகளை செய்யாமல் நாம் நினைத்த இலக்குகளை எட்ட முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் காலியாக உள்ள முதல்வர்கள் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.