சென்னை:  மெரினாவில் நடைபெற்ற விமான வான்வழி நிகழ்ச்சிக்கு அரசின் முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமானப்படையின் சார்பில், வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. திறந்தவெளியில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டு இருந்தனர். ஆனால், நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் திக்குமுக்காடினார். நூற்றுக்கணக்கானோர் மூச்சு திணறியும், வெயிலின் தாக்கம் தாங்க முடியாமலும் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு. பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (48), திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34), கொருக்குப்பேட்டை ஜான் (56), தினேஷ் (37) உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.

கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழக அரசு முறையான திட்டமிடலுடன் செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் மெரினாவில் நடைபெற்ற “வான்வழி நிகழ்ச்சிக்கு அரசின் முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது, 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் –  என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், , “சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப்படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” 

இவ்வாறு அதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை விமான சாகச நிகழ்ச்சி பலி 5 ஆக உயர்வு: மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தால் உயிரிழப்பு…

விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: இபிஎஸ், அன்புமணி, அண்ணாமலை கண்டனம்!