சென்னை:

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்வதற்காக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துவிட்டு இன்று சென்னை திரும்பினார். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்படும்.

இதற்கான வரைவு தமிழக கவர்னர் மூலம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
ஏற்கனவே தமிழக அரசு அளித்த வரைவு அடிப்படையில் உள்துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில சட்டபூர்வ நடைமுறைகளை மேற்கொள்ள தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து நாளை சென்னை வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் கூறியதன் அடிப்படையில் நாளை அவசர சட்டம் தொடர்பான நடைமுறைகள் தொடங்கும் என தெரிகிறது. இன்று இரவோ அல்லது நாளையோ தமிழக அமைச்சரவை கூட வாய்ப்பு உள்ளது. இதில் அவசர சட்டத்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பப்படும். கவர்னர் இதில் கையெழுத்திட்டு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பார். இந்த வரைவு மனு குடியரசு தலைவருக்கு உள்துறை அனுப்பி வைக்கும்.
இன்று இரவு 9.30 மணிக்கு மேல் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பிரனாப் முகர்ஜி டெல்லி திரும்புவார் என தெரிகிறது. அதனால் நாளைக்கு அல்லது நாளை மறுநாள் அவசர சட்டத்திற்கு பிரனாப் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு இருப்பதாக என செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ஏதுவாக தான் முன்கூட்டியே நாளை வித்யாசாகர் ராவ் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]