தமிழகத்திற்கு ரூ.5,027 கோடி முதலீடுகளை ஈா்ப்பதற்கான திட்டம் அடங்கிய ஒப்பந்தத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று கையெழுத்திட உள்ளாா்.
தமிழக அரசு சாா்பில் முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாடு அமா்வு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்க உள்ளார். அப்போது ரூ.5,027 கோடி முதலீடுகளை ஈா்க்கும் அளவிலான 9 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெழுத்திட உள்ளார். இதன் மூலம் 20,351 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, இந்நிகழ்வில் அமெரிக்க நிறுவனங்களுடன் ஏற்கனவே போடப்பட்டுள்ள 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட உள்ளதோடு, ரூ. 60 கோடி செலவில் 3 திறன் மேம்பாட்டு மையங்களும் திறந்துவைக்கப்பட உள்ளன.
இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தலைமை செயலாளர், அரசு முதன்மை செயலாளர்கள், பல்வேறு தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.