குத்தாலம்: தமிழக அரசு எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும், ஆதினத்துக்குள் அரசு மூக்கை நுழைக்கக்கூடாது என, திருவாடுதுறை ஆதினத்தை சந்தித்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், அ.தி.மு.க.வே பிரதான எதிர்கட்சி என அண்ணாமலைக்கு பதில் அளித்தார்.
அதிமுக துணைஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று மயிலாடுதுறையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்தார். முன்னதாக அவர் மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்துக்கு சென்றார். அவருக்கு ஆதினம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணியன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுமார் 10 நிமிடங் களுக்கு மேலாக தர்மபுரம் ஆதினத்துடன் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். தொடர்ந்து பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதரவாக பேசியதற்கு தர்மபுரம் ஆதீனம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, டெல்டா பாசன விவசாயிகளுக்கு வெள்ள காலங்களிலும், வறட்சி காலங்களிலும் உடனடியாக நிவாரணத்தையும் இழப்பீடும் வழங்கியது அ.தி.மு.க அரசு தான். விவசாயிகளை பாதுகாக்க டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் அ.தி.மு.க. அரசு தான். ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான கையெழுத்திட்டது தி.மு.க. என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். அதுபோல அதிமுக அரசுதான், 50 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு ஆய்வு குறித்து அறிக்கை அளிக்காதது ஏன் என்ற கேள்விக்கு மதம், கோவில் சம்பந்தப்பட்டது. முழு விவரம் தெரிவிக்கப்பட்ட பின்னர்தான் அறிக்கை வெளியிட முடியும் என்கின்றனர். அரசு எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும். மதத்திற்குள் யாரும் நுழையக்கூடாது. ஒவ்வொரு கோவிலுக்கு என்று வழிமுறைகள் இருக்கிறது. அதற்கென்று சட்டரீதியாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் வழிமுறைகளை நாம் தலையிடக் கூடாது. ஆதீன விவகாரங்களில் திட்டமிட்டு திமுக அரசு மூக்கை நுழைப்பது கண்டிக்கத்தக்கது. சுமார் 500 ஆண்டுகாலம் இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், ஆனால் தற்போது மட்டும் அதனை நிறுத்த திமுக அரசு முயல்கிறது. ஆதீனத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. அரசு மூக்கை நுழைக்க பார்க்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. பல ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டின பிரவேச நிகழ்ச்சியை தி.மு.க. அரசு வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்தது. அதனை கண்டித்து அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்த பிறகே தடையை விலக்கியது. யார் தவறு செய்தாலும் அதற்கு இறைவன் தக்க பதிலடி கொடுப்பார் என்றார்.
விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை திறந்தவெளியில் கொண்டுவந்து அடுக்கிவைத்து விற்பனை செய்ய முடியாமல் சேதமடைந்தது. கொள்முதல் செய்த நெல்லையும் அரசு முறையாக பாதுகாக்கவில்லை லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு செயலற்ற அரசாக இருந்துகொண்டு இருக்கிறது. விவசாயிகளிடம் முறையாக நெல்கொள்முதல் செய்யாதது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு தேவைக்கு ஏற்ப உரங்களை வாங்கி கையிருப்பு வைக்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை பற்றி தமிழக முதல்வருக்கு எதுவும் தெரியாது, வீட்டைபற்றிதான் தெரியும்.
ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் எல்கேஜி, யுகேஜி கல்வி படிக்க வேண்டுமென்று அதிமுக இத்திட்டத்தை கொண்டுவந்தது. அதனை முடக்க நினைத்தனர் அதற்கு கடும் எதிர்ப்பு வந்ததால் மீண்டும் இயங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடன் கேள்விக்குபதில் அளித்தவர், தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்துமே எதிர்க்கட்சிகள் தான். ஆனால் அ.தி.மு.க.வே பிரதான எதிர்கட்சி என்றர்.
சசிகலா தொடர்பான கேள்விக்கு, சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை அவருக்கும், அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை. என்றவர், 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக வாக்கு விகிதம் 3 சதவிகிதம் தான் அதிகமான வாக்குபெற்றது அதிமுகதான்.
இவ்வாறு அவர் கூறினார்.