சென்னை: விவசாயிகள் பெயரில் நடைபெற்ற கிசான் திட்ட முறைகேடு மற்றும் தவறுகளுக்கு அதிமுக அரசே பொறுப்பு என தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி நாராயணன் அதிரடி திருப்பதி குற்றம்சாட்டி உள்ளார்.

ஏழை விவசாயிகளுக்கு மத்தியஅரசு வழங்கும் வருடத்திற்கு ரூ.6ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது.  தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள  பிரதான் மந்திரி கிஸான் சம்மான் திட்டத்தில், தமிழக மாவட்டங்களில் போலி பயனர்கள் மூலம்   ரூ.110 கோடி மோசடி நடைபெற்று உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதற்கு உடந்தையாக இருந்த  37 அரசு  அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டு இருப்பதுடன்,  80 அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளதாகவும், வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளது.

ஆனால்,   இந்த முறைகேடுக்கு மத்தியஅரசுதான் காரணம், கிசான் திட்டத்துக்கான விண்ணப்பங் களை பெறும் நடைமுறையில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்ததுதான் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதற்கு காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு மீது  குற்றம் சாட்டி  உள்ளார்.

இந்த விவகாரம், தமிழ்நாடு மாநில பாஜக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தமிழக பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, அதிமுக அரசு மீது குற்றம்சாட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,  விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் மத்திய அரசுடையது. செயல்படுத்துவது மாநில அரசே. முறைகேடுகளின்றி செயல்படுத்துவது தான் மாநில அரசின் கடமை. தவறுகளுக்கு பொறுப்பு மாநில அரசே.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மாநில அரசு மீது தமிழக பாஜக நிர்வாகி நேரடியாக குற்றம் சாட்டி இருப்பது, அதிமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.