சென்னை:
சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அயராது பணியாற்றி வரும் சுமார்  33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.2500 மதிப்பூதியம்  வழங்கப்படும் என  தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் தன்னலம் கருதாமல் அயராது களப்பணியாற்றி வரும் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு தலா 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழகஅரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுவதுடன், நோய்த் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு,  அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபஸ்வர குடிநீர், சத்தான உணவு போன்றவை வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இது தவிர, சென்னையில் உள்ள 149 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளி லும் காய்ச்சல் சோதனை மையம் செயல்படுவதுடன், 100க்கும் மேற்பட்ட காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர். இதனால் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு தவிர்க்க வழி வகுக்கும். இதே போன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றிவரும் சுமார் 33 ஆயிரம் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் சேவையை நான் மனதார பாராட்டுகிறேன்.
அவர்களின் இந்த அரிய சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் சிறப்பினமாக 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சியில், நோய்த் தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் உள்ள ஏழைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும், கொரோனா நோய்த் தொற்றுடன் ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய் உள்ளவர்கள் இந்நோய்த் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
இப்பகுதியில் வாழும் ஏழைகளின் வாழ்விடங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் அமைந்துள்ளன. எனவே, ஒரு முக்கிய நோய் பரவல் தடுப்புப் பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கை யாக வீடுகள் தோறும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாட்களாவது தங்க வைத்து, அவர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற ஒரு முக்கிய நடவடிக்கையை அம்மாவின் அரசு எடுத்து வருகிறது.
இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்படும். அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்படும் போது, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்படும்.
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். எனவே, பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.