தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதற்காக குரூப்-1, குரூப்-2 குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதில் கு, குரூப்-1, குரூப்-2 நிலையிலான பணிகளுக்கு எழுத்துத் தேர்வுடன், நேர்முகத் தேர்வும் நடைபெறும். ஆனால், குரூப்-4 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.
இந்த நிலையில், குரூப்-2 தேர்வுகளில் நேர்முகத்தேர்வை ரத்து செய்ய தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாகவும், குரூப்-2 பணிகளில் குறிப்பிட்ட ஊதிய விகிதத்துக்கு மேல் உள்ள பதவிகளுக்கு மட்டும் நேர்முகத் தேர்வுநடத்தவும், எஞ்சிய பெரும்பாலான பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்கவும் முடிவு செய்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அரசு துறைகளின் கீழ் உள்ள, நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும், குரூப்2 நேர்முகத் தேர்வு நீக்கப்பட்டு குரூப்-2-ஏ தேர்வின் கீழ் கொண்டுவரப்படும் தெரிகிறது. தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகள் நேர்முகத் தேர்வு நீக்கப்படும் பதவிகளின் பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிகிறது.