சென்னை:
தமிழக காவல்துறையைச் சேர்ந்த டிஐஜி கண்ணன் உள்பட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு வீரதீர செயல்களுக்கான முதல்வர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவ கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமுடப்பட்டிருந்த தீவிரவாத அமைப்பை டிஐஜி கண்ணன் உள்ளிட்ட 5 அதிகாரிகள் ‘ஆபரேஷன் குவாண்டோ’ கீழ் மேற்கொண்ட உளவுப் பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கியூ பிரிவு எஸ்பி ஜே.மகேஷ்,
சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. எஸ்.அரவிந்த்,
கோவை சிறப்பு புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி பி.பண்டரிநாதன்,
சென்னை சிறப்பு டிவிஷன் ஐஜி எம்.தாமோதரன்
உள்ளிட்ட நான்கு அதிகாரிகளுக்கும் வீரதீர செயல்களுக்கான முதல்வர் விருது வழங்கப்படுகிறது.
விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல்துறை ஆய்வாளர் வில்சன் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட டிஐஜி கண்ணன் தலைமையிலான காவல்துறையினர், வில்சனை கொன்ற 2 தீவிரவாதிகளான தௌஃபிக், அப்துல் சமீம் ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்தனர்.
இதன் காரணமாக டிஐஜி கண்ணன் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு வீரதீர செயல்களுக்கான முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.