கோட்டை வட்டாரத்தில் கேட்ட தகவல்கள்:
தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், திடீரென பதவி விலகி இருப்பது பல மட்டங்களிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.


ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, ஷீலா பாலகிருஷ்ணனை தலைமைச் செயலாளராக நியமித்தார். ஜெ.வின் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார் ஷீலா.
இவரது ஆலோசனையைக் கேட்காமல், ஜெயலலிதா எந்த முடிவும் எடுத்ததில்லை. அதே போல அமைச்சர்களைப்போலவே, அப்படி குனிந்து ஃபைல்களை நீட்டுவார் ஷீலா.

அமைச்சர்களுக்கும் மேலானவராக வலம் வந்த, ஷீலா, எந்த நேரம் வேண்டுமானாலு் ஜெ.வின் போயஸ் இல்லத்துக்கு சென்று வரும் உரிமை பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றுவிட, தனது சிறப்பு செயலராக இருந்த ராம் மோகன் ராவை, தலைமைச் செயலராக நியமித்தார் ஜெ.

அதே நேரம் ஷீலாவை விட்டுவிட மனமின்றி, அவரை தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக நியமித்தார். ஆகவே தலைமைச் செயலாளருக்கும் மேலானவராக ஷீலா திகழ்ந்தார். எந்த ஒரு கோப்பும் ஷீலாவின் பார்வைக்கு முதலில் வந்த பிறகே, தலைமை செயலருக்கு செல்லும்.

இந்த நிலையில்தான் ஜெயலலிதா மறைந்தார். ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானார். இனிநிலைமை எப்படி இருக்குமோ என்று யோசித்த ஷீலா, தனது பொறுப்பில் இருந்து விலக நினைத்தார். அதை முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் தெரிவித்தார்.

பன்னீர்செல்வமோ, “அம்மா (ஜெயலலிதா)வால் நியமிக்கப்பட்டவர் நீங்கள். நிறைந்த அனுபவம் உள்ளவர். ஆகவே எனது ஆட்சியிலும், அரசுக்கு தொடர்ந்து செயல்படுங்கள். எல்லா ஆலோசனைகளும் உங்களைக் கேட்டே இந்த அரசில் நடக்கும்” என்றார்.

அதன்படியே ஓ.பி.எஸ். நடந்துகொண்டார்.

அதனால், ஷீலா பாலகிருஷ்ணனும், அரசு சிறப்பு ஆலோசகராக பணியில் தொடர்ந்தார். முதல்வர் டில்லி சென்ற போதும் உடன் சென்றார்.
இதற்கிடையே ஓ.பி.எஸ்ஸுக்கு சசிகலா தரப்பினரால் நெருக்கடிகள் வர ஆரம்பித்தன. அந்த நெருக்கடிகளின் வீச்சு, ஷீலாவை நோக்கியும் பாய ஆரம்பித்தன.

இது ஷீலாவுக்குப் பிடிக்கவில்லை.குறிப்பாக, பன்னீர்செல்வத்தின் அரசு ரீதியான நடவடிக்கைகளை ஷீலா மூலம் அறிந்துகொள்ள விரும்பியது சசிகலா தரப்பு. இது அவரை மிகவும் பாதித்தது.

அடுத்ததாக, காவல் அதிகாரிகள் சிலர் மூலம், ஷீலாவின் நடவடிக்கைகளை உளவு பார்க்கும் வேலைகளும் நடந்தன. இது அவரை டென்ஷனாக்கி விட்டது.
இதை ஓ.பி.எஸ்ஸிடம் ஷீலா தெரிவித்தும் பயனில்லை. தானே கையறு நிலையில் இருப்பதாக அவர் கைவிரித்துவிட்டார்.

ஒரு கட்டத்தில், பன்னீர்செல்வத்துக்கும் ஷீலா மீது சந்தேகம் ஏற்பட்டது. தனது உத்தரவுகளை மட்டும் அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்பதாக தெரிவித்திருக்கிறார். இன்னாரு புறம், சசிகலா தரப்பும் உத்தரவுகளைக் கொட்ட ஆரம்பித்திருக்கிறது.

ஷீலாவுக்கு அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தவிர, இப்படியொரு சிக்கலான சூழலில் ஆட்சி நிர்வாகத்தில் இருந்து செயல்படுவது, பிற்காலத்தில் தனக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் கருதியிருக்கிறார்.

இதையடுத்துதான், தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று சொல்லி, பணி நீட்டிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் கொடுத்தார்.

இதே போன்ற நெருக்கடிகளுக்கு, முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் செயலர்களாக இருக்கும் வெங்கட் ரமணன், ராமலிங்கம், விஜயகுமார் போன்றவர்களுக்கும் இருக்கின்றன. வெங்கட் ரமணனும், ராமலிங்கமும் நீண்ட விடுப்பில் சென்றிருக்கிறார்கள். அப்படியே பணியிலிருந்து விலகவும் அவர்கள் எண்ணியிருக்கிறார்கள்.

வேறு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதே காரணங்களால் மனப்புழுக்கத்தில் இருக்கிறார்கள். மத்திய அரசுப்பணிக்கு செல்ல சிலர் முயற்சித்து வருகிறார்கள்.
ஆக, தற்போது தமிழக அரசில் இரு அதிகார மையங்கள் உருவாகியுள்ளன. அதிகாரிகள் திண்டாடி வருகிறார்கள். இது தமிழக வளர்ச்சிக்கு நல்லதல்ல” என்கிறது கோட்டை வட்டாரம்.