சென்னை: நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. இன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
பொறியியல் படிப்பான பிஇ, பிடெக் ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தர வரிசை பட்டியல் (செப்டம்பர் 14ந்தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து, இன்று பொறியியல் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் ஆன்லைனில் தொடங்கியுள்ளது.
இன்று, முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1லட்சத்து51ஆயிரத்து 870 இடங்கள் உள்ளன. இதில் சேர, விண்ணப்பித்தவரகளில் 1,39,033 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். இதனால் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 51 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுவதால், வீட்டில் இணைய வசதியை அணுக முடியாத மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கலந்தாய்வு, அரசுப் பள்ளியில் பயின்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நடத்தப்படுகிறது. இதன்மூலம் மொத்தம் 5 கட்டமாக கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.