சென்னை:
அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு தமிழகத்தில் நடைபெறாதவாறு தடுக்ககப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் சட்டசபையில் பேசினார்.
அடுத்த ஆண்டு முதல், ‘நீட்’ எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து மத்திய அரசு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழக மாணவர்களும், அடுத்த ஆண்டு முதல் மருத்துவக்கல்வி படிக்க “நீட்” (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகிறது. இந்த தகுதித்தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சட்டசபையில் எதிக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாவது:
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நடை முறைப்படுத்தும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
எனவே, ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதை பாதிக்கக்கூடிய இந்த பொது நுழைவுத் தேர்வைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது:
நீட் பொது நுழைவுத் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 9-6-2005-இல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையை நடத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்ததே முதல்வர் ஜெயலலிதாதான்.
எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில மருத்துவ நுழைவுத் தேர்வு அனுமதிக்கப்படாது. ஒருபுறம் சட்டப் பேராட்டம், மறுபுறம் மத்திய அரசை அணுகி நீட் தேர்வு தமிழகத்தில் அமலாக்குவதைத் தடுப்பது என்ற கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றார்.