சென்னை:
போக்குவரத்துத்துறை முறைகேடுகளை தமிழக அரசு தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடமிருந்து கணக்கில் வராத 117 சவரன் தங்க நகை மற்றும் 24 லட்சத்து 15 ஆயிரத்து 780 ரூபாய் பணமும், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடமிருந்து 1லட்சத்து 43 ஆயிரத்து 250 ரூபாய் பணமும் இடைத்தரகர் அதுல் பிரசாத்திடமிருந்து ரூ. 7,850 பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று, சென்னை, ஓசூர், தேனி, ஊத்துக்கோட்டை, நசரத்பேட்டை, வேலூர், தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், விழுப்புரம், கோவை உள்ளிட்ட 17 சோதனைச் சாவடிகளில் இன்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகள் நடத்தியதில் மட்டும் கணக்கில் வராத மொத்தம் ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை என்பது இன்று முற்றிலும் ஊழலால் புரையோடிவிட்டதையே இத்தகைய சோதனையும், மீட்கப்பட்ட பணமும், நகைகளும் பிரதிபலிக்கின்றன. இதனால், சாதாரண மக்களால் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு போன்றவற்றைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்துத் துறையில் ஊழலுக்கே இடமில்லை என்று அரசு தரப்பில் செய்யப்படும் பிரச்சாரம், கடந்த சில நாட்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்படும் சோதனையால் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறைக்கு சில தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள், ஜி.பி.எஸ். கருவிகள் வாங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருப்பதாகவும், இதில் மெகா வசூல் நடப்பதாகவும் தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் புகார் தெரிவித்திருந்தார்.

பொதுச் சேவை மற்றும் சரக்கு வாகனங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் வாகன கண்காணிப்புக் கருவி பொருத்தும் திட்டத்தில் 5 ஆயிரம் கோடி அளவுக்குத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாகச் சர்வதேச சாலை பாதுகாப்பு நிபுணர் டாக்டர் கமல் சோய் குற்றம் சாட்டியுள்ளார்.

நடைமுறையைப் பின்பற்றாமல், 8 தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் கருவிகளை வழங்க தன்னிச்சையாக ஒப்புதல் அளித்திருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இத்தகைய முறைகேட்டால், பெண்கள் பாதுகாப்பு குறித்த முக்கிய நோக்கம் தோல்வியடைந்துள்ளது.

சோதனை செய்வதும், வழக்கு என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு அந்த சம்பவம் மறந்துபோவதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது. ஏதோ, போக்குவரத்துத்துறையில் கீழ்நிலை ஊழியர்கள் தான் இந்த முறைகேட்டில் ஈடுபடுவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் அளவிலிருந்து சமிக்ஞை வராமல் இத்தகைய முறைகேட்டில் யாரும் ஈடுபடச் சாத்தியமில்லை என்பதே உண்மை.

மேல்மட்டத்திலிருந்து விசாரித்தால் தான், இது போன்ற ஊழலுக்கு முடிவு கட்ட முடியும். தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் தான் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரு சில போக்குவரத்து அலுவலகங்களில் கணக்கில் வராத இவ்வளவு பெரிய தொகை சோதனையில் சிக்கியிருக்கிறது. சோதனை செய்யாத மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில் எத்தனை கோடி ஊழல் நடைபெறுகிறதோ? இது மாநில அளவில் போக்குவரத்து அமைச்சரின் ஆதரவில்லாமல் மாவட்ட அளவில் போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் நடக்க வாய்ப்பு இல்லை. இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் தான் பொறுப்பு.

இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணையோடு நிறுத்தாமல், இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமைச்சர் முதல் அதிகாரிகள் வரையிலான தொடர்புகள் வெளிவந்தால் தான், போக்குவரத்துத் துறை மீது படிந்துள்ள கறை நீங்கும்.

எனவே, தமிழக அரசு தாமாக முன்வந்து, போக்குவரத்துத் துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்காவிட்டால், நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ. விசாரணை கோருவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.’ இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.