“மொழி என்பது ஒரு நாட்டின் பண்பாடும், அடையாளமும் ஆகும்!” என்று உலக “தாய்மொழி தின” செய்தியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 21ம் தேதி, உலகம் முழுவதும் தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“மக்கள் தங்கள் தாய்மொழிகளை போற்றி வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் யுனெஸ்கோ நிறுவனம் பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது. “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகளுக்கேற்ப, அமுதம் போன்ற இனிமையும், இலக்கியச் செழுமையும், வலுவான இலக்கணக் கட்டமைப்பும் தன்னகத்தே கொண்டு, தென்னக மொழிகளின் தாயாகவும், உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த முதன்மொழியாகவும் விளங்கிடும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை இந்த இனிய நாளில் போற்றிட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனைப் பேணிக் காத்திடும் வகையிலும், தமிழ் அமைப்புகள், சங்கங்களை ஊக்கப்படுத்திட எண்ணற்ற திட்டங்களைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தி வருகிறது.
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகைசெய்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியாரின் விருப்பத்திற்கேற்ப, சீன-அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை மொழிபெயர்ப்புச் செய்தும், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி அளித்தம் இருக்கிறது.
மொழி என்பது ஒரு நாட்டின் பண்பாடும், அடையாளமும் ஆகும். இந்த உலகத் தாய்மொழி நாளில், தமிழர் பண்பாட்டையும், அடையாளத்தையும் காத்து வளர்த்திட, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றி வளர்த்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.