அரசு விழாக்களில் என் புத்தகங்கள் பரிசளிக்க வேண்டாம்! தலைமைச்செயலாளர் இறையன்பு வேண்டுகோள்

Must read

சென்னை: அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறும், தான் பதவியில் இருக்கும்போது, தான் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டாம்   இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொகுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை.

இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய வேண்டுகோள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்குப் பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என் நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை மீறினால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்/

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article