சென்னை :
தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது. அவரது வீட்டிலிருந்து அதிகாரிகள் புறப்பட்டனர்.
தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், 58, வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை 5.15 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், இந்த சோதனை நடந்தது. இச்சமயத்தில் பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் ஈடுபட்டது.
ராவ் வீட்டில் 24 மணி நேரமாக நடந்த சோதனையை முடித்துக் கொண்டு, இன்று காலை அதிகாரிகள் புறப்பட்டனர். மத்திய ரிசர்வ் போலீசாரும் புறப்பட்டு சென்றனர்.
ராவ் மகன் விவேக்கை, விசாரணைக்காக அவரது திருவான்மியூர் வீட்டிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். நந்தனத்திலுள்ள விவேக்கின் லுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது. ராமமோகனராவின் உதவியாளர்கள் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், தங்கம் சிக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் 25 முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.