ஸ்வேதா

‘மசான்’ ஹிந்திப் படம் மூலம் புகழ்பெற்ற பாலிவுட் ஹீரோயின் ஸ்வேதா திரிபாதி, தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் கோவையைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர்!

பாலு மகேந்திரா, கமல்ஹாசன் மற்றும் ராஜூ முருகனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சரவணன் ராஜேந்திரன்.  இவர் இயக்கும் முதல் படம் ஜெயன்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிறது.

இந்தப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ஸ்வேதா திரிபாதி. படம் குறித்து நம்மிடம் பேசிய இயக்குநர் சரவணன் ராஜேந்திரன், “இது ஒரு ரொமாண்டிக் திரைப்படம். படத்தின் பெரும்பகுதி குளு குளு சூழலி்ல் கொடைக்கானலில்  நடக்க இருக்கிறது. வட இந்தியாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

ரங்கராஜ்

படத்துக்கான எழுத்து வேலைகளை முடித்த பிறகு நாயகன், நாயகிக்கான வேட்டையை துவங்கினோம்.   தமிழ் திரையுலகிற்கு பரிச்சயமில்லாத புதுமுகங்கள்தான் எங்கள் சாய்ஸாக இருந்தது.

இந்த நிலையில்தான் ஸ்வேதாவை தேர்வு செய்தோம். கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமானவராக அவர் இருந்தார்” என்றார்.

ஹீரோ பற்றி கூறும்போது, “நானும், படத்தின் கதாசிரியர் ராஜூ முருகனும் கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அங்குதான் சமையல்கலை நிபுணரான ரங்கராஜை பார்த்தோம். அவரது பேச்சு, பாவனை எல்லாம் எங்களை ஈர்த்தது.  ‘இவர் நமது கதைக்கு சரியாக இருப்பார்’ என்று ராஜூ முருகன் கூறினார். ரங்கராஜிடம் கேட்ட போது  நடிக்க சம்மதித்தார். பிறகு பலவித கோணங்களில் அவரை படம் எடுத்து பார்த்தோம். கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார். ஆகவே அவரை தேர்வு செய்தோம்” என்றார்.

சரவணன் ராஜேந்திரன்

நாயகன் ரங்கராஜிடம், “முதல் படத்திலேயே பாலிவுட் ஹீரோயினுக்கு ஜோடியாக நடிக்கப்போகிறீர்கள். எப்படி ஃபீல் பண்றீங்க” என்றோம்.

“எம்.சி.ஏ. படித்துவிட்டு, குடும்பத்தொழிலான கேட்டரிங்கில் ஈடுபட்டு வந்தேன்.  சூர்யா, கார்த்தி திருணங்கள் என்று நிறைய திரை நட்சத்திரங்கள் குடும்ப விழாக்களுக்கு கேட்டரிங் செய்திருக்கிறேன். ஆனால் திரைப்படத்தில் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

எதிர்பாராமல் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹீரோயின் ஏற்கெனவே இரு படங்கள் பண்ணியிருக்காங்க. மற்ற ஆர்ட்டிஸ்டும் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவங்க.அவங்க எல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க என்கிற நம்பிக்கை இருக்கு” என்றார் ரங்கராஜ்.

“நவம்பர் மாத இறுதியில் கொடைக்கானலில் படப்பிடிப்பு துவங்குகிறது” என்றார் இயக்குநர் சரவணன் ராஜேந்திரன்.

தயாரிப்பு நிறுவனம், இயக்குநர், நாயகன் என்று புதுமுகங்களின் கூட்டணி பெரு வெற்றி பெற வாழ்த்துகள்!