தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்புகள் அரங்கேறிவருகிறது. பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே இரு அணி முன்னணி தலைவர்களும் மாறி மாறி கருத்து தெரிவித்தனர்.
இதனால் பேச்சுவார்த்தை இழுபறியாகவே உள்ளது. சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று ஓபிஎஸ் தரப்பு உறுதியாகக் கூறிவிட்டனர்.
இந்நிலையில், சேலத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கட்சியும் ஆட்சியும் நம்மிடத்தில் உள்ளது.90 சதவீத தலைமை நிர்வாகிகள் நம்மிடத்தில் உள்ளனர். எனவே, பிரிந்து சென்றவர்கள் இணைந்தாலும் பரவாயில்லை; இணையாவிட்டாலும் பரவாயில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வரும் 5ம் தேதி முதல் ஒரு மாதம் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க உள்ளதாகத் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்னை, டாஸ்மாக் எதிர்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.