ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் லீக் போட்டியில், தமிழக அணி, ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான போட்டித் தொடர் விஜய் ஹசாரே கோப்பைத் தொடராகும். இதன் 18வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில், மொத்தம் 22 அணிகள் கலந்துகொள்ளும் நிலையில், அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

தமிழக அணி ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதன் கேப்டன் தினேஷ் கார்த்திக். ஒரு லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை சந்தித்த தமிழக அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய தமிழ்நாடு அணியில் 3 பேர் அரைசதம் அடித்தனர். அபினவ் முகுந்த் 75 ரன்களும், தினேஷ் கார்த்திக் 52 ரன்களும், அபராஜித் 52 ரன்களும் அடித்தனர். ஷாருக்கான் 48 ரன்களில் அரைசத வாய்ப்பை நழுவவிட்டார்.

இறுதியில், 48 ஓவர்கள் வரை ஆடிய தமிழ்நாடு அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 262 ரன்களை எடுத்து வென்றது.