சென்னை:
காவிரி விவகாரம் தொடர்பாக இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தின்போது, மத்திய மாநில அரசுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் சாலைமறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது.
சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து பேரணியாக சென்று மெரினாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது புரசைவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்டாலினுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது என்றார். மேலும் ஒருசில ஊடகங்கள் சில இடங்களில் கலவரம் என்று செய்தி வெளியிடுவதாகவும், அதுபோன்று எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றும், நாளை காலை மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க இருப்பதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற்ற போராட்டம் 100% வெற்றியடைந்துள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
மக்களின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் போராடிவருகிறோம் என்று ஜவாஹிருல்லா கூறினார்.