சென்னை:

தமிழக கவனர்னரை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சட்டமன்ற கொறடா தாமரை ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அதிமுக இரு அணிகள் இணைந்த பிறகு அதற்கு டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏ.க்கள் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்களது ஆதரவு இல்லை என்று கூறி கடிதம் கொடுத்தனர்.

இதை பெற்றுக் கொண்ட கவர்னர் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் இந்த 19 எம்எல்ஏ.க்களும் புதுச்சேரி அருகே உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், சட்டமன்ற கொறடா அனுமதி இல்லாமல் கவர்னரை சந்தித்து மனு கொடுத்த 19 எம்எல்ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தாமரை ராஜேந்திரன் சட்டமன்ற சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனால் தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இது குறித்து ராஜேந்திரன் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘19 எம்.எல்.ஏக்கள் முதல் அமைச்சருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கி விட்டதாகவும் . அது குறித்து ஊடகங்களுக்கும் பேட்டி அளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து 19 எம்.எல்.ஏக்கள் 19 பேரை இடை நீக்கம் செய்ய கொறாடா என்ற முறையில் சபாநாயகரிடம் பரிந்துரைத்துள்ளேன். தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

கட்சி முடிவுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டதால் 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் அணியினர் அரசுக்கு எதிராக வாக்களித்த போதும் இதேபோன்ற மனுவை சபாநாயகரிடம் கொடுத்தேன்’’ என்றார்.