சென்னை

மிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கூறும் கருத்துக்கள் மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்திய மக்களவை தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக தலைமை குறித்தும் உறுப்பினர்கள் கூறும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்டி வருகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வெகுநாட்களாக நடைபெறாமல் உள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது ஆளும் கட்சி அரசியலில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டப்படாமல் உள்ளது. எனவே ஆளுநர் இதில் தலையிட்டு தமிழக சட்டப்பேரவையை கூட்ட ஆவன செய்ய வேண்டும்.

சட்டப்பேரவை கூட்டம் நடக்காததால் அரசுப் பணிகளில் கடும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம், மேட்டூர் அணை திறப்பு, காவிரிக்கு கர்நாடகா நீர் திறக்காதது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

ஆனால் கூட்டத்தை கூட்டுவதில் தாமதம் உண்டாவது தேவையில்லாத நெருக்கடியையும் குழப்பத்தையும் உண்டாக்கி உள்ளது. எனவே உடனடியாக இவற்றை களைய சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.