சென்னை,
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜனவரி) 8ந்தேதி கூடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பு, ஆர்.கே.நகரில் டிடிவி வெற்றி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் 8ந்தேதி தொடங்க இருப்பதாக சட்டசபை செயலக வளாக செய்திகள் தெரிவிக்கின்றன.
2018ம் ஆண்டு தொடங்க உள்ள முதல் கூட்டத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது முதல் உரையை நிகழ்த்த இருக்கிறார்.
தமிழக சட்டசபையின் கூட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம் நிறைவு பெற்றது. அப்போது டிடிவி ஆதரவாளர்கள் 18 பேரின் எம்எல்ஏ பதவியை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே திமுக சார்பாக, அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக கூறி, அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டம் புத்தாண்டின் இரண்டாவது வாரத்தில் கூட இருப்பதாக சட்டசபை வளாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டத் தொடங்கும். தமிழக புதிய கவர்னர் பன்வாரிலும் தனது முதல் உரையை சட்டமன்றத்தில் நிகழ்த்த உள்ளார்.
முதன்முதலாக சபைக்கு வரும் அவரை, சபாநாயகர், அவை முன்னவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சம்பிரதாயப்படி சபைக்கு வரவேற்று அழைத்து வருவார்கள். அதைத் தொடர்ந்து கவர்ன உரை நிகழ்த்துவார்.
தொடர்ந்து, கவர்னரின் உரையின் தமிழ் மொழி பெயர்ப்பை சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் முடிவடையும்.
பின்னர் மறுநாள் முதல் கவர்னர் உரை குறித்து விவாதம் தொடங்கும்.
இந்த கூட்டத்தொடரின்போது, கவர்னரின் ஆய்வு, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், ஆர்.கே.நகர் தேர்தல் போன்றவை குறித்து அனல்பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
மேலும், அரசை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் எம்எல்ஏவாக கலந்துகொள்ள இருப்பதால் சட்டசபை கூட்டம் மேலும் சூடு பறக்கும் என நம்பப்படுகிறது.