சென்னை:

மிழக அரசு கேபிள்டிவி கட்டணம் ரூ.130 மற்றும் ஜிஎஸ்டி வரி மட்டுமே என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் 60 கட்டணச் சேனல்கள் உள்பட 200 சேனல்களை காணலாம்.

நாடு முழுவதும் கேபிள் கட்டணத்துக்கு வரி உயர்த்தப்பட்ட நிலையில், அரசு கேபிள் டிவி கட்டணமும் ரூ.200 ஆக உயர்ந்தது. இது பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூலை மாதம் 31ந்தேதி, தமிழக முதல்வர் கேபிள் கட்டணத்தை குறைப்பதாக அறிவித்தார்.

அதன்படி, ரூ.130 உடன் ஜிஎஸ்டி வரி மட்டும் செலுத்தினாலே போதும் என்று கூறப்பட்டது. இந்த புதிய கட்டணம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மாதக் கட்டணத்தை ரூ.130/- + வரி என குறைத்து, ஆகஸ்டு 10, 2019 முதல் நடைமுறைப்படுத்த அறிவிப்பு வெளியிட்டார்கள்.

அதன்டிப, அரசு கேபிளில் 60 கட்டணச் சேனல்கள் உட்பட 200 சேனல்கள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களான விஜய் டிவி, சன் டிவி, கே டிவி, ஆதித்யா டிவி, சுட்டி டிவி, ராஜ் டிவி, ஜெயா டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ், மெகா டிவி, டிஸ்கவரி தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், மூவிஸ் நவ் போன்ற சேனல்களும் வழங்கப்படுகின்றன.

பொதுமக்கள் இச்சேவையைப் பெறுவதற்கு, தங்கள் பகுதி உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை அணுகலாம், தற்சமயம் செட்டாப் பாக்ஸ் முற்றிலும் விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.