சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுக்களில் டாக்டர் வர்கீஸ் குரியனை படத்தை பிரிண்ட் செய்து, இந்தியாவில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் குரியனை ஆவின் நிர்வாகம் கவுரப்படுத்தி உள்ளது.
வெண்மைப் புரட்சி என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும். அப்போது, தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த டாக்டர். வர்கீஸ் குரியன் இதனை முதலில் குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரத்தில் உள்ள அமுல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தினார். இதனால் இவரை இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இந்திய மக்களிடையே இன்றையமையாத உணவாக மாற்றி மில்க் மேன் என்றும் பாராட்டப்படுகிறார். டாக்டர் வர்க்கீஸ் குரியனின் சொந்த ஊர் கேரளாவைச் சேர்ந்த கோழிக்கோடு.
இன்று அவரது பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில், தமிழ்நாடு ஆவின் நிர்வாகம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது படத்தை பிரிண்ட் செய்துள்ளது.