தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் டிரைவர் ஒருவர் கணக்கில் தவறுதலாக ரூ.9000 கோடி வரவு வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கிருஷ்ணன் தனது தலைமை பொறுப்பில் இரந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இது 1921ம் ஆண்டு தமிழக நாடார் சமுகத்தினரால் நாடார் வங்கி என வியாபார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டு வணிக மேம்பாட்டிற்காக விரிவாக்கப்பட்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என பெயர் மாற்றப்பட்டது. தனியார் வங்கிகளியே சிறப்பாக நடைபெற்று வரும் வங்கிகளில் டிஎம்பி முதன்மையாக திகழ்கிறது. 2018-19 நிதி ஆண்டில் ₹2,585 மில்லியன் நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது டிஎம்பி வங்கி.
இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் வங்கி கணக்கில், தவறுதகலாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி ரூ.9000 கோடி வரவு வைக்கப்பட்டதாக அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்ததுடன், எதற்கும் தமது கணக்கில் இருந்து நண்பர் கணக்குக்கு பணம் அனுப்பி பார்க்கலாம் என கூறி முதற்கட்டமாக, ரூ.21,000 பணம் அனுப்பியுள்ளார். அதன்பிறகே, தனது வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வந்துள்ளது என மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், உஷாரான வங்கி நிர்வாகம், அவருக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை உடனே திரும்ப பெற்றுக்கொண்டு, அவரை அழைத்து, வருத்தம் தெரிவித்து உள்ளது.
ஆனால், ராஜ்குமார், இதை மீடியாக்களுக்கு தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெளிப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான S.கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கிருஷ்ணன் பதவி விலகுவதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலுக்கு அவரது ராஜினாமா கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது