சென்னை: கவர்னர் பொறுப்பில் இருந்து விலகிய முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் இன்று பாஜகவில் இணைந்தார். அவரை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்று, உறுப்பினர் அட்டை வழங்கினார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில், முதல்கட்ட வாக்குப்பதிவு தேதியான ஏப்ரல் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான சூழலில், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது ராஜினாமாவை குடியரசு தலைவரும் ஏற்றுக்கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வகையில், அவர் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் பரவின. பிரதமர் மோடி, இவரை தேர்தலில் போட்டியிட கூறியதாகவும், எனவேதான் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழிசை, “தீவிரமான மக்கள் பணியை நேரடியாக செய்யவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆளுநராக இருந்தபோது மக்களுக்கான ஆளுநராகவே இருந்திருக்கிறேன். ஆளுநர் பதவி காலத்தில் அரசியல் அனுவபம் அதிகரித்திருக்கிறது. இந்த பதவி என்னுடைய அரசியல் பணியை தடுக்கவில்லை. ராஜினாமா ஏற்றுக்கொண்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கூறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று காலை பாஜக தலைமையகமான சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்துக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜனை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் கார்டை, மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
மீண்டும் பாஜகவில் இணைந்துள்ள தமிழிசை, சென்னை அல்லது தூத்துக்குடியில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாஜவுக்கு தென் மாநிலங்களில் வாங்கு வங்கி பெருகி உள்ள நிலையில், கனிமொழியை எதிர்த்து மீண்டும் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தனது கட்சிணை இணைத்து பாஜகவில் இணைந்த சரத்குமார் நெல்லை அல்லது வேறு தொகுதியில் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.