பெங்களூரு: வாகனங்களில் ஹாரன் சத்தங்களை தேவையின்றி எழுப்ப வேண்டாமென விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழராகிய பாரதி ஆதிநாராயணன். இவர் பெங்களூரில் பணிபுரியும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்.
கடந்த 2016ம் ஆண்டு இதுதொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியது பெங்களூரு மிர்ரர். இதில் இணைந்த பாரதி ஆதிநாராயணன், முதலில் தனது சொந்த காரை ஓட்டிச் செல்லும்போது ஹாரன் அடிக்காமல் ஓட்டி வழிகாட்டுதலைப் பின்பற்றினார்.
தன் முயற்சியில் வெற்றியடைந்தவுடன், பிறரிடம் விழிப்புணர்வை எடுத்துச் சென்றார். அவர் பலவிதமான ஸ்டிக்கர்களை வைத்துக்கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவருகிறார். பெங்களூரு நகரில் ஒலி மாசு அதிக உச்சத்தில் உள்ளது. டிராஃபிக்கில் சிக்கும் பல ஓட்டுநர்கள் ஹாரன் பொத்தானில் இருந்து தங்களின் கைகளை எடுப்பதேயில்லை.
“ஹாரன் வேண்டாம், சத்தம் வேண்டாம், ஒலியெழுப்ப வேண்டாம், ஓசை வேண்டாம், தயவுசெய்து ஹாரன் அடிக்க வேண்டாம், அமைதி காக்கவும், மிகவும் அவசியமின்றி ஹாரன் பயன்படுத்த வேண்டாம்” என்பன போன்ற பல வாசகங்கள் அந்த ஸ்டிக்கர்களில் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்டிக்கர்களின் மூலம் அவர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.