சென்னை: குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உயர் நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகரிக்கலாம் என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதன்மூலம், தமிழகத்தின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறும் நிலை உருவாகி உள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விரையில் அலுவல் மொழி யாக தமிழ் அறிவிக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை.
மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில், மாநில மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மாநில மொழிகளிலேயே வழக்குகளை விசாரிக்கப்பட வேண்டும், தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக மாநில மொழியான தமிழை அங்கீகரிக்க வேண்டும் என பல வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை தமிழக மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உயர் நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகரிக்கலாம் என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கர், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் முறையே தமிழ், குஜராத்தி, இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைப் பெறப்பட்ட நிலையில் அவை ஏற்கப்படவில்லை. தமிழ்நாடு அரசிடம் இருந்து பெறப்பட்ட மற்றொரு வேண்டுகோளின் அடிப்படையில் முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அரசு வேண்டுகோள் விடுத்தது. இது தொடர்பான பரிசீலனைக்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முந்தைய முடிவுகளையே மீண்டும் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய மொழிகள் குழுவை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ் ஏ பாப்டே தலைமை யில் இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. சட்டம் தொடர்பான அம்சங்களை மாநில மொழிகளில் மொழி பெயர்க்கும் நோக்கில் சொற்களஞ்சியத்தை இந்தக்குழு உருவாக்கி உள்ளது. இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.
அதனப்டி, அரசியல் சாசனத்தின் 348(1)(ஏ)பிரிவு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. 348-வது சட்டப்பிரிவின் 2-வது பிரிவின் உட்பிரிவு (ஏ) பிரிவு (1)-ல், உயர்நீதி மன்றங்களின் நடவடிக்கைகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில மொழிகளில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி பயன்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்போது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உயர் நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகரிக்கலாம் என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து உள்ளது.