சென்னை: காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், தமிழக அரசு பணிகளில் வேறு மாநிலத்தவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில், தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப்பணிகளில் சேர தமிழ் மொழி கட்டாயம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு  தமிழக அரசு  அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, டி.என்.பி.எஸ்.சியில் தமிழ் தேர்வு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம், , மருத்துவ பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்.  தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக்கு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தின் இதர தெரிவு முகமைகளிலும்  கட்டாய தமிழ் மொழித்த தகுதி தேர்வினை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது,  காவலர் தகுதித் தேர்வில்  தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சீருடை  பணியாளார் தேர்வாணையம்  தெரிவித்திருக்கிறது.

தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 % மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவல் பணிக்கான எழுத்து தேர்வு கணக்கில் கொள்ளப்படும் என்றும், இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே காவலராக முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.