தஞ்சாவூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், தஞ்சாவூரில் தமிழர் தேசிய முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
அப்போது, தேசிய முன்னணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவது, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை தமிழகத்தில் திணிப்பது, இந்து மதவாதத்தை தூக்கி பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜக, தமிழகத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த பேரபாயத்தை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் முதன்மையான கடமையாகும். எனவே, பாஜக கூட்டணியை முறியடிக்கும் வகையில், வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]