சென்னை:
கடந்த 3 ஆண்டுகளாக நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் நீட் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் படும் நிலையில், தமிழகஅரசு திடீரென நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் 2முறை தீர்மானம் நிறைவேற்றியும், தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து, அவை அனைத்தும் தள்ளுபடியான நிலையில், நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு தலையாட்டி பொம்மையாக இருந்து வரும் தமிழக அரசும், நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீட் கோச்சிங் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.