டெல்லி: அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பிரச்சினை தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று முற்பகல் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். காவிரி நீர், மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேச டெல்லி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டுக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரள மாநிலங்களுக்கும் இடையே நதி நீர் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் ஆணையங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அண்டைய மாநில அரசுகள் அதை மதிக்காமல் முரண்டு பிடித்து வருகின்றனர்.
காவிரி பிரச்சினையில், கர்நாடக காங்கிரஸ் அரசு, கூட்டணி கட்சி ஆட்சியான திமுக ஆட்சி செய்து வரும் தமிழ்நாட்டுக்கே துரோகமிழைத்து வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக அரசிடம் நேரடியாக கேட்காமல், எப்போதும் போல பிரதருக்கு கடிதம் எழுதி மட்டுமே வருகிறார்.
இதற்கிடையயில், தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டு வருகிறது. ஆனால், அதை ஏற்க கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது.
கடந்த 32வது காவிரி மேலாண்மை கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும் என்பதை நீர்வளத்துறை செயலாளர் மணி வாசகம் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இன்று மாலை 4 மணியளவில் நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து பேச உள்ளார்.
காவிரி மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும் என்பதை பற்றி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முல்லை பெரியாறு விவகாரம் குறித்து அவர் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.