சென்னை:
தமிழ்நாடு ஊர்தி நிராகரிப்பு செய்த ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இதில், அந்தந்த மாநிலங்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அந்த அலங்கார ஊர்திகள் அமைந்திருக்கும். அந்தவகையில் இந்தாண்டுக்கான அலங்கார ஊர்தியை தமிழ்நாடு அரசு உருவாக்கியிருந்தது. ஆனால், ஒன்றிய அரசு நிராகரித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சார்பாக அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார், பாரதியார் உள்ளிட்ட விடுதலை வீரர்கள் கொண்ட அலங்கார ஊர்தி சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகல்கள் கூறுகின்றன. மேலும், மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்குத் தெரியாது எனவும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிராகரிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் மீதும் தமிழின் மீதும் அதிக பற்று உள்ளதாகவும், திருவள்ளுவரை பற்றி பெருமையாக பேசும் பிரதமர் மோடி, குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.