ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்து போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் தொ.மு.ச. சங்க பணியாளர்களைக் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை இன்று காலை விசாரித்த நீதிபதி, பொங்கல் பண்டிகை நேரத்தில் நடத்தப்படும் இந்த போராட்டம் முறையற்றது என்று விமர்சித்தார்.

போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்ற போதும் பொங்கலின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மக்களே.

அரசும், போக்குவரத்து தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். இந்த போராட்டத்தை இந்த மாத இறுதிக்கு தள்ளிவைக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக மீண்டும் பிற்பகல் விசாரணை நடைபெற்றது. அப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில், போராட்டம் ஜனவரி 19ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்தனர்.