சென்னை,

காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில்அளித்த முதல்வர் பழனிச்சாமி, களவுபோன சொத்துகளை மீட்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக பெருமிதத்தோடு கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டு நாட்களாக  காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தது.

இன்று விவாதத்தின்மீது பதில் அளித்த முதல்வர் பழனிசாமி  “களவுபோன சொத்துகளை மீட்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கடந்த 3 ஆண்டு தகவலின் அடிப்படையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது என்று கூறினார்.

ஆனால்,  அரசின் சிறிய குறைகளைக்கூட பூதாகரமாக்கி, அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,  தமிழ்நாடு, தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு தலையீடும் இல்லாமல், காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் மிகக் குறைவான அளவில் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

தி.மு.க. ஆட்சியைவிட அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

பல்வேறு போராட்டங்களில், காவல்துறை திறமையாகச் செயல்பட்டதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை தவிர்க்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த காவல்துறையாக தமிழக காவல்துறையை உயர்த்தியவர், ஜெயலலிதா. அடுத்த தேர்தலைப் பற்றி எண்ணாமல், அடுத்த தலைமுறையைப் பற்றி எண்ண வேண்டும் என்றார்.

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில், தமிழகம் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, தேர்வாணையம்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்,  காவல்துறையில் 45, தீயணைப்பு துறையில் 9 புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.