சென்னை:
தமிழகத்தில் நாட்டிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பின்மீதான மோகம் குறைந்து வருவதால், பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் இல்லாமல் காற்றுவாங்கி வருகிறது.
இந்த நிலையில், அங்கு வேலை செய்து வரும் பேராசிரியர்கள், லெட்சரர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் நடப்பாண்டில் சுமார் 20 சதவிகித ஆசிரியர்கள் வேலையை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தற்போதைய கல்வி நிலவரம் மற்றும் பொறியியல் கல்விக்கான வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு, ஏற்கனவே பல கல்லூரிகள் தங்களது கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ள நிலையில், நடப்பாண்டு நடைபெற்று முடிந்த கவுன்சிலிங்கை தொடர்ந்து மேலும் 20 சதவிகித பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடப்பாண்டு பொறியியல் கல்லூரி கலந்தாய்வில் ஒருசில கல்லூரிகளைத் தவிர பெரும்பாலான கல்லூரிகளில் சுமார் 40 சதவிகித மாணவர்கள் மட்டுமே சேர்க்கை நடைபெற்று உள்ளது. 276 பொறியியல் கல்லூரிகளில் 40 சதவிகிதத்திற்கும் குறைவான அளவிலே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. சில கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேராத அவலமும் நிகழ்ந்துள்ளது.
நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வின்போது சிவில் பிரிவுக்கு 23 சதவிகிதம் பேரே சேர்ந்துள்ள தாகவும், மெக்கானிக்கல் பரிவுக்கு 36 சதவிகிதம் பேரும் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல கல்லூரிகளில் இருந்த சிவில், மெக்கானிக்கல் பிரிவுகன் தோடர்பான பேராசிரியர்களே அதிக அளவில் வேலைஇழந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன்பு 63,501 ஆசிரியர்கள் இருந்தனர். நடப்பாண்டில் 201 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே 40% க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பியுள்ளன. 40% மாணவர்கள் இல்லாமல், மீதமுள்ள கல்லூரிகள் தொடர்ந்து நடத்துவது என்பது கடினம். இதன் காரணமாக அந்தக் கல்லூரிகள் ஆசிரியர்களை குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லையெனில் அவர்கள் மாத சம்பளத்தை கூட செலுத்த முடியாது. இந்த நிலையில் ஏராளமான ஆசிரியர்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு சுமார் 12000 ஆசிரியர்கள் வேலையை இழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு மேலும் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ள சோகம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள பிரபலமான பொறியியல் கல்லூரி ஒன்று சுமார் 44 பேராசிரியர்களை நீக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற நிலைமை ஆபத்தானது என்று கிண்டியின் பொறியியல் கல்லூரி முன்னாள் டீன் எம் சேகர் தெரிவித்து உள்ளார்.