சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.48000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும் பெண்களுக்கு இலவச பேருந்து அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநகரங்களில் மட்டும் பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை. அதனால், தங்களுக்கும் இலவச பேருந்து விட வேண்டும் என கிராமப்பகுதி பெண்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில்,இன்றைய சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது, அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏவுமான செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகின்ற சூழலில் இந்த நடவடிக்கையை தற்போது மேற்கொள்ள இயலவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழக அரசு இயக்கி வரும் பெண்களுக்கான இலவச பேருந்துகளில், சென்னை போன்ற மாநகரங்களில், பல ஆயிரம் அரசு பெண் ஊழியர்கள் பயணித்து வருகின்றனர். பலஆயிரங்கள் சம்பளமாக பெறும் அவர்களுக்கு இலவச பேருந்து பயணம் எதற்கு என கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், தகுதியானவர்களுக்கு மட்டுமே இலவசங்களை வழங்க வேண்டும் என்றும், அரசியலுக்காக கண்ணை மூடிக்கொண்டு மக்கள் பணத்தை வீணாக்கக்கூடாது என்றும் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.