சென்னை,
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி விவசாய சங்க பிரமுகர்கள் தமிழக அமைச்சரை இன்று சந்திக்கிறார்கள். அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் விவசாய சங்க உறுப்பினர்களுடன் தமிழக அமைச்சர் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
இன்று தலைமை செயலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் வருவாய் மற்றும் வேளாண்மை துறை உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்து விட்டதாலும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுத்ததாலும் தமிழகத்திலும், குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதோடு சம்பா பயிர்களும் காய்ந்து போய்விட்டது.
இதன் காரணமாக மனம் உடைந்த விவசாயிகள் தற்கொலை முடிவை நாடுகின்றனர். பலருக்கு பயிர்கள் கருகுவதை காணும்போது ஏற்படும் அதிர்ச்சி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டும் மரண மடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், என்றும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்றும் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த தமிழக அரசு முன்வந்துள்ளது.
இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில், அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.