சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் எஸ்பிஐ வங்கி அலுவலக்த்தின் மூன்றாவது மாடியில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் , கம்ப்யூட்டர் உபகரணங்கள் எரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் எஸ்பிஐ வங்கியின் அலுவலகம் உள்ளது. இங்கு வங்கி, இன்சுரன்ஸ் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த வளாகத்தின் மூன்றாவது மாடியில் எஸ்பிஐ இன்சுரன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தளத்தில்  இன்று காலையில் ஊழியர்கள் பணிக்கு வந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால்  ஊழியர்கள் அலறி அடித்தபடியே வெளியேறினார்கள்.
மூன்றாவது தளத்தில் பற்றிய தீ மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியது.  தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மூன்று தீயணைப்புத்துறை வாகனங்கள் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றன.
இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஆனால் தீ இதுவரை கட்டுக்குள் வராமல் எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைத்த பிறகே, எதனால் தீ விபத்து ஏற்பட்டது, சேதத்தின் மதிப்பு என்ன என்பது தெரியவரும்.