சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்; 6ஆயிரம் புதிய குடியிருப்புகள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் குடிசை மாற்று வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று (செப்டம்பர் 1ந்தேதி) 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொடர்பான மானியக் கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இன்று முதல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நெல்லை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல், நாமக்கல், சேலம் என மொத்தம் 6 ஆயிரம் குடியிருபுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் ரூ.950 கோடியில் மொத்தம் 6 ஆயிரம் குடியிருப்புகளை கட்ட உள்ளதாகவும், சென்னை மற்றும் இதர நகரங்களில் 601 திட்டப் பகுதிகளில் 28,247 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது என குடிசை மாற்று வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.