சென்னை: முதியவர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு கோரியுள்ளது.
கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த 34 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 3.7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந் நிலையில், முதியவர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு கோரியுள்ளது.
மே மாதம் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள், கூட்டங்கள் நடக்க உள்ள நிலையில் முன்னுரிமை தர வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறி உள்ளார். தமிழக அரசின் இந்த வலியுறுத்தலை ஓய்வுபெற்ற மருந்தியல் நிபுணரான சீனிவாஸ் ராவ் சிறந்த யோசனை என்று தெரிவிக்கிறார்.
அவர் கூறியதாவது: தமது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் எப்போதும் ஏதேனும் ஒன்றிரண்டு கொரோனா தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோயில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்றார்.
திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் பால் தேவதாசனும் இதையே வலியுறுத்துகிறார். ஒரு வருடமாக நாங்கள் வீட்டிலேயே உள்ளோம். வெளியில் உள்ள நிலவரத்தை அறியமுடியவில்லை. நீண்ட தூரம் கூட செல்ல முடியவில்லை. விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என்று கூறினார்.