சென்னை,
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள், சீருடை வழங்கினார். அப்போது, தனியாருக்கு இணையாக தமிழக கல்வித்துறை செயல்பட்டு வருவதாக பெருமிதமாக கூறினார்.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு இன்று வருகை புரிந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். மாணவர்களுக்கு புத்தகங்கள் ,சீருடை ஆகியவற்றை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பொதுத்தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ்-ல் அனுப்பினோம்; நாட்டில் வேறெங்கும் இது சாத்தியமில்லை, தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் அனுப்பி, இந்த அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதை உணர்த்துகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையில் எடுக்கப்படும் முடிவுகளை நாடே பாராட்டுகிறது என்று கூறினார்.
தமிழக அரசு பாடத்திட்டத்தில் விரைவில் யோகா மற்றும் சாலை விதிகள் சேர்க்கப்படும், என்றும், தனியாருக்கு இணையாக தமிழக பள்ளிக்கல்வித் துறை திகழ்ந்துக் கொண்டிருப்பதாக செங்கோட்டையன் பெருமிதம் கொண்டார்.
மேலும், ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவை வெளிப்படை தன்மையுடன் நடந்துள்ளன என்றும், மாணவர்களின் நலனுக்காகவே கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் நீட் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, நீட் தேர்வு விலக்கு குறித்து தொடர்ந்து நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம் என்றும், நாங்கள் எடுக்கும் முடிவுகளை நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்று கூறினார்.
மாணவர்களின் நலனை மேம்படுத்தவே கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்றும், ஆசிரியர்களின் கடுமையான பணிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.