சென்னை: 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாமக யாருக்கு என்பதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கு இடையே சலசலப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, தந்தையும், மகனும் தங்களது ஆதரவாளர்களை அழைத்து கூட்டத்தை பாட்டி, நாங்கள் வெயிட் பார்ட்டி என கூறி வருகின்றனர். இதனால் பாமக உடையும் வாயப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. பாஜக ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், மேலும் சில கட்சிகளை இழுக்க முயற்சித்து வருகின்றன. தற்போதைய நிலையில் பாமக, தேமுதிக கட்சிகளை இழுக்க திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் “சொல்வதற்கு புதிய செய்தி ஒன்றும் இல்லை. வியாழக்கிழமை தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். அப்போது நல்ல செய்தி வரும்” என்றார்.
அமித்ஷாவின் தமிழக வருகை தொடர்பான கேள்விக்கு, “நான் எல்லா தலைவர்களையும் நேசிப்பவன். பல பிரதமர்களோடு தொடர்பில் இருந்தவன். இப்போதைய பிரதமர் மோடி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் இதுவரை சந்தித்தது இல்லை. ஆனாலும் அவரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.
இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக மோடியும், அமித்ஷாவும் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்து கள்” என்று தெரிவித்தார்.
மேலும், அமித் ஷா மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராமதாஸ், “தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என அமித்ஷா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். எந்தக் கட்சி குறித்தும் குறை சொல்ல வேண்டிய நேரம் இது கிடையாது, கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
முன்பு இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லை என தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திடீரென அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். அடுத்ததாக பாமக மற்றும் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் ராஜ்யசபா சீட் பிரச்சனை காரணமாக அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் உள்ளது. எனவே ஜனவரி மாதம் தங்கள் கூட்டணி தொடர்பான நிலையை அறிவிப்போம் என தெரிவித்து விட்டது. பாமகவை பொறுத்தவரை தற்போது உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. தந்தை மகன் இடையே நடைபெறும் மோதல் காரணமாக கூட்டணி தொடர்பாக முடிவுகள் எட்டப்படவில்லை.
கடந்த தேர்தலில் தான் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனச் சொன்னதாக ராமதாஸே கூறி இருந்தார். இதற்கிடையே தான் ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்தார். இந்நிலையில், 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வீழ்த்தப்படும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் அமித்ஷா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், அமித்ஷா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் என தெரிவித்தார்.
மேலும், கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே பாமக அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது