சென்னை:

மிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றிய ஊழியர்கள் ஓய்வுபெற்றும், அவர்களுக்கு உரிய பணிக்கொடை உள்பட ஓய்வூதிய பலன்கள் கொடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழக அரசு ரூ .1,093 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து துறையில் 5500 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

(பைல் படம்)

தமிழகத்தில் மெட்ரோபொலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (எம்.டி.சி), சென்னை, ஸ்டேட் எக்ஸ்பிரஸ் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (எஸ்.இ.டி.சி) மற்றும் தமிழ்நாடு மாநில போக்கு வரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி), வில்லுபுரம் உள்ளிட்ட எட்டு மாநில போக்குவரத்து நிறுவனங்கள் (எஸ்.டி.யு) உள்ளன.  இதில் 56,000 ஓட்டுநர்கள் மற்றும் 54,000 நடத்துனர்கள் உட்பட 1.4 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். .

இந்த நிறுவனங்களில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 700 முதல் 1,000 ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களிடம் இருந்து வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்), கிராஜுவிட்டி மற்றும் விடுமுறை சம்பளம் உள்பட சலுகைகள் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஆதரவாக போக்கு வரத்து துறை ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த 2017ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் 2018ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தின் தலையீட்டின் பேரில் ஒத்தி வைக்கப்பட்டது.

அப்போது, தமிழக அரசு சார்பில், போக்குவரத்து துறையில் ஆண்டு 2800 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தது. பின்னர்  நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து,  நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்த நிலையில் தற்போது நிலுவைத் தொகையை வழங்குவம் வகையில் ரூ .1,093 கோடி ஒதுக்கி உள்ளது.

இதுதொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற மானிய கோரிக்கை தொடரின் போது பேசிய  தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,  ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவையில் உள்ள நன்மைகள் தொடர்பான துணை மதிப்பீடுகளில் ரூ .1,093 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த  ஒரு வாரத்திற்குள் நிலுவை தொகையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன.