சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களில் 84 பேர் டெல்லி தப்லிஜி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இன்று 96 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லி நிஜாமுதீன் தப்லிக் மார்க்காஸ் மாநாட்டில் தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட நிலையில் அவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்கள் வசித்து வந்த பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும், கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள 96 பேரில் 84 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்றும். தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மழை காரணமாக கொரோனா தொற்று அதிகமாகுமோ என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், அதை இப்போது கூற முடியாது என பதில் கூறினார். கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருப்பதாக தெரிவித்தார், தமிழகத்திற்கு இன்று இரவு 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வருகின்றன. ரேபிட் கருவி மூலம் கொரோனா பாதிப்பை 30 நிமிடத்தில் கண்டறியலாம என்றும் கூறினார்.