சென்னை: தமிழகத்தில் கொரோனா 3வது அலை வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழகஅரசு தயார்நிலையில் உள்ளது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நல திட்ட உதவிகள் குன்றத்தூர் பகுதியில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உதவிகள் வழங்கினார். அந்த பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள், முடித்திருத்தம் செய்வோர், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என 1000-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி ,பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கி உரையாற்றினார்.
அப்போது, கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கொரோனாவின் 2வது அலையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கட்டுப்படுத்தி உள்ளது. 3வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள திமுக அரசு தயாரக உள்ளது.
கடந்த ஆட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்தவொரு முன்னேற்பாடும் செய்யவில்லை. அதனால்தான் இந்த முறை கொரோனா தீவிரமாக பரவியது என்று குற்றம் சாட்டிதுடன், கொரோனாவை எதிர்கொள்ள தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் , வீட்டிலேயே எளிய முறையில் ஆவி பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.