டெல்லி: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழகம் 10வது இடத்தில் உள்ளதாக மத்தியஅரசு  தகவல்  வெளியிட்டுள்ளது. பீகார் முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் , இலவச கல்வி மற்றும் பொருட்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவம் படிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு போன்ற சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாகவும்,  பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து வருகிறது.

 தரமான கல்வியை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் 27வது இடத்தைப் பிடித்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வருத்தம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. விக்கிபீடியா தகவலின்படி, தமிழ்நாட்டில் 37,211க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 54.71 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ள அரசுப் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.  அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொறியியல் துறையில் 7.5% இடஒதுக்கீடு திட்டத்தையும் மாநிலம் கொண்டுள்ளது. மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தாலும், இடைநிற்றல் விகிதம் குறித்து கவலைகள் உள்ளன, இது தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

இந்த நிலையில்,  மத்தியஅரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு 10வது இடத்தில்தான் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள தகவலில்,   கடந்த 2021-22-ம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14.32 கோடியாக இருந்தது. ஆனால் இது தற்போது 1 கோடியே 54 லட்சம் குறைந்து போய் 12 கோடியே 78 லட்சம் ஆக உள்ளது.

மாநில வாரியாக அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 574 பேர் படிக்கின்றனர். 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் தலா 1.58 கோடி மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

இந்த பட்டியலில், 10-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 48 லட்சத்து 40 ஆயிரத்து 34 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் 53 லட்சத்து 14 ஆயிரத்து 845 மாணவர்களும், 2022-23-ம் ஆண்டுகளில் 50 லட்சத்து 42 ஆயிரத்து 26 மாணவர்களும் அரசு பள்ளிகளில் படித்து உள்ளனர்.

இந்த பட்டியலின்படி, ஒவ்வொரு ஆண்டும்  அரசு பள்ளிகளில்  மாணவர்கள் சேர்க்கை குறைந்து இருப்பதை காட்டுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறி வருகிறது.