சென்னை,

மிழ்நாடு முழுவதும் நாளை பிளஸ்-2 தேர்வு ஆரம்பமாகிறது. இந்த கல்வி ஆண்டில் 8.98 லட்சம் பேர்  பிளஸ் 2 தேர்வு எழுத இருக்கிறார்கள்.  2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தேர்வை கண்காணிக்க  3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ்2 பொதுத்தேர்வு  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து நாளை தொடங்க இருக்கும் தேர்வில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதுகின்றனர்.  அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் மாணவிகள்.  2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தனித்தேர்வர்களாக 20 ஆயிரத்து 448 மாணவர்களும், 11,392 மாணவிகளும், பிற பாலினத்தவர் 3 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 300 பேர் கொண்ட பறக்கும் படை வீதம் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தேர்வு நடக்கும் போது, அனைத்து மையங்களில் திடீரென சோதனை மேற்கொள்வார்கள்.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் செருப்பு, ஷூ, டை அணிந்து வரக்கூடாது. செல்போனுக்கும் அனுமதி இல்லை. உரிய பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கு கால்குலேட்டரும் எடுத்து வரக்கூடாது.

ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல்  மாணவர்களின் விடைத்தாளிலும் மாணவர்கள் போட்டோ இடம் பெறுகிறது.

வருகை பதிவேட்டிலும் மாணவர்களின் புகைப்படம் இடம் பெறுகிறது.

நாளை தமிழ்  முதல் தாள் 1’ தேர்வு நடைபெற இருக்கிறது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. ஆனால் மாணவர்கள் 9.30 மணிக்கே தேர்வு அறைக்குள்  வர வேண்டும். 10 மணிக்கு விடைத்தாள் கொடுக்கப்படும்.

அந்த விடைத்தாளில் மாணவர்களின் புகைப்படம், தேர்வு பதிவெண், தேர்வு எழுத வேண்டிய பாடம், தேர்வு மையம் போன்றவை முகப்பு தாளில் அச்சிடப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்க 5 நிமிடம் மாணவர்கள் எடுத்து கொள்ள வேண்டும்.

அதை சரிபார்த்த பிறகு மாணவர்கள் முகப்புதாளில் கையொப்பமிட வேண்டும்.

சரியாக 10.05 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும்.

படித்து பார்ப்பதற்கு மாணவர்கள் 10 நிமிடங்கள் வழங்கப்படும்.

தொடர்ந்து 10.15 மணிக்கு, விடை எழுத தொடங்க வேண்டும்.

மொழி பாடத்திற்கு கோடிட்ட 38 பக்கம் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும்.

தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் விடைத்தாள் வழங்குவார்கள்.

மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும்.

இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.